ஆப்கனில் வெள்ளத்தில் மூழ்கி 160 பேர் உயிரிழப்பு..உடல்களைத் தேடும் பணிகள் தீவிரம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. புயல் வேகத்தில் பாய்ந்த நீரில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
மண்ணில் புதையுண்ட மக்களைத் தேடும் பணியில் மக்களும் அரசுப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆப்கனின் வடக்குப் பகுதியில் உள்ள 13 மாகாணங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் காபூலுக்கு வடக்கிலுள்ள பார்வான் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 116 உயிரிழந்துள்ளதுடன், 120க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இங்கு காணாமல்போன உடல்களைத் தேடும் பணி தொடர்வதாக பார்வான் மாகாண கவர்னரின் பெண் செய்தித்தொடர்பாளர் வாஹிதா ஷாகர் கூறியுள்ளார்.
அதிகாலையில் பார்வான் பகுதிக்குள் பாய்ந்த வெள்ளநீரில் வீடுகளும் கட்டடங்களும் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் ஏற்கெனவே பொருளாதார நஷ்டத்தில் உள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்காக காவல்துறையினர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு உதவும் பணியில் ஆப்கன் ராணுவத்திற்கு, உணவு, குடிநீர், போர்வைகள் வழங்கி நேட்டோ படைகளும் ஆதரவளித்துவருகின்றன.

