பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் மக்கள் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் மக்கள் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் மக்கள் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய அரசு அமைக்க தலிபான் அமைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நிலையில், நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் தலைநகர் காபூல் மற்றும் மசர் உள்ளிட்ட நகரங்களில் தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தலிபான்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மக்களை மிரட்டினர். ஒரு சில பொதுமக்களை அவர்கள் தாக்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே தொடங்கிய இந்தப் போராட்டம், சில நிமிடங்களிலேயே பல்வேறு பகுதிகளுக்கு பரவியதாகவும் தெரிகிறது. போராட்டத்தின் போது, ‘பாகிஸ்தான் ஒழிக’ என்றும் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ‘ஐஎஸ்ஐ ஒழிக’ என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், “எங்களுக்கு விடுதலை வேண்டும்” என்றும் ‘ஆப்கானிஸ்தான் வாழ்க’ என்றும் முழங்கினர். இது, அங்கிருந்த தலிபான்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாலேயே அவர்கள் வன்முறையை கையிலெடுத்ததாக தெரிகிறது.

இந்த போராட்டங்கள் வெடித்ததன் பின்னணியில், தலிபான்களின் செயல்பாடுகளை எதிர்த்த ஒரே ஆப்கன் மாகாணமான பஞ்ச்ஷீர் பகுதியின் தலைவர் அஹமத் மசூத் கடந்த திங்கள்கிழமை உதிர்த்த வார்த்தைகள் காரணமாக இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். அவர் “தலிபானுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெள வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். இவரின் இந்த கோரிக்கைதான் மக்களை போராட்டத்துக்கு தூண்டியிருக்கும் என நம்பப்படுகிறது.

முன்னதாக தலிபான் அமைப்பின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியை பல இடங்களில் இருந்து அகற்றியது பொதுமக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருந்தது. மற்றொருபக்கம், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் தலிபான்களுடன் சேர்ந்து பஞ்ச்ஷீர் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதன் முடிவில், அஹமத் மசூத் ஆதரவாளர்களை கொன்று குவித்து, தலிபான்கள் அந்த மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்தே, ‘பாகிஸ்தான் ராணுவம் எப்படி ஆப்கானிஸ்தான் மண்ணில் நுழைந்து ஆப்கானித்தான் நாட்டவர்களை தாக்கலாம்? இதை தடுக்க தலிபானுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெள வேண்டும்’ என்று அஹமத் மசூத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு பக்கம், ஆப்கன் நாட்டில் அமைய உள்ள புதிய அரசில், ‘ஹக்கானி நெட்வொர்க்’ உள்ளிட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நுழைக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலும் ஆப்கானிஸ்தான் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேபோல பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு தலைவரான ஹமீத் இப்போது காபூல் நகரிலே முகாமிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த ஆப்கானிஸ்தான் கொடியை, ஹமீத் அங்கே வந்த பிறகு ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் நீக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான் அமைப்பு தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ராணுவத்தினரும் அஹமத் மசூது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் அதற்கான சதித்திட்டத்தை ஹமீது வடிவமைத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் அல்-கய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் தெரிகிறது.

தீவிரவாத அமைப்புகள் இயக்கமான ஐஎஸ்ஐ, தற்போது தலிபானின் அமைப்பையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தலிபான் அமைப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுதான் காரணமென எதுவும் உறுதிசெய்யப்படாவிட்டாலும், இதற்குப்பின் அடுத்த நாளான இன்றைய தினமேவும் போராட்டம் வெடித்துவிட்டது. தொடர்ந்து ஆயுதமேந்திய தலிபான்கள் காபூல் முழுவதும் குவிக்கப்பட்டனர். போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் அங்கிருந்து அராஜகமாக இழுத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவர்களை பல இடங்களில் சிறைபிடித்த தலிபான்கள், பின்னர் மாலையில் ஒரு சிலரை விடுவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் அடைத்து வைத்ததாக காபூலில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் தாங்கள் சார்ந்த ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தை துப்பாக்கி முனையில் முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள் தற்போது காபூல் நகரம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளனர். மேலும் நாட்டில் உள்ள பல்வேறு சந்தைகள், கடைகள் மற்றும் மருத்துவமனைகள் தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ளன என்றும் ஆரம்பத்தில் சொன்னதுபோல தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் மக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றும், ஏற்கனவே இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு, பெண்கள் மிகவும் அச்சத்துடன் உயிருக்கு பயந்து ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தலிபானின் உண்மை முகம் தற்போது உணரப்பட்டுள்ளது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com