ஆப்கானிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சரை குறிவைத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்துக்குள் விலக்கிக் கொள்ளப்படுவர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள தாலிபான் அமைப்பினருக்கும், அரசு படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
பல இடங்களை தாலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில், தலைநகர் காபூலில் பாதுகாப்பு நிறைந்த ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதுவின் வீட்டை குறித்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் வீட்டில் இல்லாத நிலையில், துப்பாக்கியுடன் அப்பகுதியில் நுழைந்த 3 பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 பொதுமக்களும், 3 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில், 10 பேர் காயமடைந்தனர். இதனிடையே பல இடங்களில் அரசுக்கு ஆதரவாகவும், தாலிபான்களுக்கு எதிராகவும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.