ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் மேலும் 107 இந்தியர்கள்
(கோப்பு புகைப்படம்)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 107 பேர் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
இன்று இந்தியர்கள் 107 பேர் உள்ளிட்ட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப் படை விமானம் புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக காபூல் விமான நிலையம் வரும் வழியில், 150 இந்தியர்களை தடுத்து நிறுத்திய தலிபான்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அனுப்பியுள்ளனர். ஆவணங்கள் சரிபார்ப்புக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் தலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் தஜிகிஸ்தானின் துஷான்பே விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆப்கானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

