லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் லாரி மீது மோதிய விமானம்
லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஏரோமெக்சிகோ விமானம் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது.
மெக்சிகோ நாட்டின் ஏரோமெக்சிகோ விமான நிறுவனத்தின் போயிங் 737 ரக ஜெட் விமானம் சுமார் 150 பயணிகளுடன் மெக்சிகோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்பட்டு வந்தது.
லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலைத்தில் தரையிறங்கி ஓடுபாதையை கடந்து பயணிகளை இறக்கிவிடும் ஏணிப்படி வாகனத்தை நோக்கி நகர்ந்து சென்றபோது, விமான நிலையத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு லாரி குறுக்கே வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரியின் மீது ஏரோமெக்சிகோ விமானம் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த லாரி நிலைதடுமாறி, கவிழ்ந்தது, விமானத்தின் வலதுப்புற இறக்கையும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த இரு பெண்கள் உள்பட எட்டுபேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்கு பிறகு விமானத்தில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அந்த விமானத்தின் பெட்ரோல் டாங்க் பகுதிக்கு எவ்வித சேதமும் ஏற்படாததால் பெரும் விபத்து ஏற்படவில்லை.