சிங்கள கொடியை ஏற்ற மறுத்த தமிழ் அமைச்சருக்கு சிக்கல்!
இலங்கையில் சிங்கள கொடியை ஏற்ற மறுத்த தமிழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருப்பவர் கந்தையா சர்வேஸ்வரன். இவர் கடந்த வாரம் வவுனியாவில் சிங்களப் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது இலங்கையின் தேசிய கொடியை அவர் ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் மறுத்துவிட்டார். இலங்கை தேசிய கொடியில் உள்ள சிங்க சின்னம், பெரும்பான்மை சிங்களர்களின் பிரதிபலிப்பு என்றும் சிறுபான்மை தமிழர்களை ஆதரிக்கும் விதமாக அந்தக் கொடியில் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், ‘இதுபற்றி அட்ட அமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.
‘இதுபற்றி ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.