தொகுப்பாளரை அறைந்த சம்பவம்: நடிகர் வில் ஸ்மித்துக்கு விருது அகாடெமி அமைப்பு கடும் கண்டனம்

தொகுப்பாளரை அறைந்த சம்பவம்: நடிகர் வில் ஸ்மித்துக்கு விருது அகாடெமி அமைப்பு கடும் கண்டனம்

தொகுப்பாளரை அறைந்த சம்பவம்: நடிகர் வில் ஸ்மித்துக்கு விருது அகாடெமி அமைப்பு கடும் கண்டனம்
Published on

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் வில் ஸ்மித் மேடையில் வைத்து அறைந்திருந்தார். இச்சம்பவத்திற்கு விருதுகளை வழங்கும் அகாடெமி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடைபெற்றது. விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். விழாவின்போது, அங்கிருந்த நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் ஹேர்ஸ்டைல் குறித்து, தொகுப்பாளராக இருந்த கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். வில் ஸ்மித்தின் மனைவி ஜடா, அலோபெசியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தலையில் முடி திட்டு திட்டுகளாக உதிரும் வகையான இந்த நோய் இருப்போருக்கு, தலைமுடி வளராது. இவரை `ஜி.ஐ. ஜோ’ என்ற ஹாலிவுட் படத்தில் மொட்டைத் தலையுடன் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கிறிஸ் ராக் கேலி செய்திருந்தார். தன் மனைவியை கிண்டலுக்குள்ளாக்கியதை கண்டு கோபமடைந்த வில் ஸ்மித், ஆவேசமாக எழுந்து மேடைக்கு வந்து அங்கிருந்த கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத தொகுப்பாளர், சுதாரித்துக் கொண்டு, நகைச்சுவைக்காகவே அப்படி சொன்னதாக விளக்கமளித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத வில் ஸ்மித், "உனது வாயால் என் மனைவியின் பெயரைச் சொல்லாதே" என்று உரத்த குரலில் திட்டியவாறே இருக்கைக்கு திரும்பினார்.

இந்நிகழ்வு நடந்த சில நிமிடங்களுக்குப் பின்னர் சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டபின்னர், தான் நடந்துகொண்ட விதத்திற்கான சக கலைஞர்களிடம் மன்னிப்பு கோருவதாக வில் ஸ்மித் மேடையிலேயே கூறினார். பின்னர் தற்போது கிரிஸ் ராக்கை டேக் செய்து இன்ஸ்டாவிலும் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், `உருவகேலி எனும் வன்முறையை விட, அறைந்தது பெரிய வன்முறை அல்ல. உருவகேலி செய்வோருக்கு, அதன் தீவிரத்தை புரிய வைக்க வேண்டிய நேரமிது’ என்றும் பலர் சமூக வலைதளங்களில் வில் ஸ்மித்துக்கு ஆதரவு குரலும் தந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் `அகாடெமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் ஆண்ட் சயின்சஸ்’ (Academy of Motion Picture Arts and Science), வில் ஸ்மித்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான ஆய்வை தொடங்கியிருப்பதாகவும் அகாடெமி அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் விதிகள் மற்றும் கலிபோர்னியா மாகாண சட்டங்களில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த அமைப்பு தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஆஸ்கர் வரலாற்றின் மறக்க முடியாத நிமிடங்களில் ஒன்றாக இந்த சம்பவம் மாறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com