அரிய வகை எலும்பு புற்றுநோயால் 20 வயதில் இறந்த இளம்பெண்... கவலையில் அவரது ஃபாலோயர்ஸ்!

அரிய வகை எலும்பு புற்றுநோயால் 20 வயதில் இறந்த இளம்பெண்... கவலையில் அவரது ஃபாலோயர்ஸ்!
அரிய வகை எலும்பு புற்றுநோயால் 20 வயதில் இறந்த இளம்பெண்... கவலையில் அவரது ஃபாலோயர்ஸ்!

20 வயதில் அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக மரணித்த இளம்பெண்ணுக்காக, அவரது ஃபாலோயர்ஸ் பலர் கவலையில் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி வந்தவர் 20 வயது இளம்பெண்ணான எலினா ஹுல்வா. இவர், அரியவகை எலும்பு புற்றுநோயால் ஜனவரி மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு, அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்தவர்களைப் பாதிப்படையச் செய்திருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, அவருக்கு ’எவிங் சர்கோமா’ (Ewing sarcoma) என்ற அரிய வகை எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் புற்றுநோயானது, எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் ஒரு அரிய வகை புற்றுநோயாகும். இந்த புற்றுநோய், அதைக் கண்டுபிடித்த மருத்துவர் ஜேம்ஸ் எவிங்கின் பெயரில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இவ்வகை புற்றுநோய், தொடை எலும்பு, மேல் கை எலும்பு ஆகியவற்றில் இருந்து தொடங்குவதாகவும், இது பெரும்பாலும் கால் எலும்புகள் மற்றும் இடுப்பை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த நோய் அசாதாரணமானது என்றாலும், மார்பு, வயிறு மற்றும் கைகால்களின் மென்மையான திசு பகுதிகளிலும் பரவும் வாய்ப்புண்டு. எலும்பில் வலி, அதிக சோர்வு, காய்ச்சல் மற்றும் எதிர்பாராத எடை இழப்பு ஆகியன இப்புற்றுநோயின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகிறது.

இந்த அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 20 வயது எலினா, அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துவந்தார். பல மாதங்களாக அதிலிருந்து தாம் மீண்டு வருவது பற்றி உருக்கமான பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார். அதுபோல், தன்னைப் பின்தொடர்பவர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் பதிலளித்து வந்தார். இதனால், அவர் உயிருக்குப் போராடிய போதும் தன்னுடைய பதிவுகளால் பலருடைய மனங்களிலும் நின்றார்.

இந்த நிலையில், அவருடைய கடைசிப் பதிவு எல்லோர் இதயங்களையும் கணக்கச் செய்திருக்கிறது. அவர் தன்னுடைய கடைசிப் பதிவில், "விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. மருத்துவர்கள், எனது சுவாசத்தில் அதிகமான நோய்களைக் கண்டறிந்தனர். இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், உங்களுக்குத் தெரியும் அங்குதான் நாம் சுவாசிக்கிறோம்” என அவர் பதிவிட்டிருந்த கடைசிப் பதிவைக் கண்டு பலரும் அதற்கு கண்ணீருடன் பதிலளித்து வருகின்றனர்.

அவரைப் பின்தொடர்பவர்களில் ஒருவர், "நான் எலெனா ஹுல்வாவைப் பல மாதங்களாகப் பின்தொடர்ந்து வருகிறேன். தற்போது, அவருடைய மரணத்தால், என் ஆன்மா உடைந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "எலினா ஹுல்வா எங்களுக்குக் கற்பித்த எல்லாவற்றிற்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com