சிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ
சிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீனின் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நெகிழியின் கொடுமையை இந்த வீடியோ விளக்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
வனங்கள் அழிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, நெகிழி பொருட்கள் பயன்பாடு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், மிகச்சிறிய தாவரங்கள் வரை கடல் வாழ் உயிரினமான மிகப்பெரிய திமிங்கலம் வரை பேராபத்தை சந்தித்து வருகின்றன. கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நெகிழி. எங்கோ தூக்கி எறியப்பட்டும் சாதாரண ஒரு நெகிழி, கடலில் உள்ள ஒரு பெரிய மீனை சாகடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படிப்பட்ட நெகிழியின் ஆபத்தை உணர்த்தும் விதமாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடலுக்கு அடியில் கிடக்கும் ஒரு சிறிய நெகிழிக்குள் சிக்கிய மீன் ஒன்று நீந்த முடியாமல் தவிக்கும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் சிப்ஸ் பாக்கெட் அளவிலான நெகிழுக்குள் மீன் ஒன்று சிக்கியுள்ளது.
தன் செதில்களும் நெகிழியில் சிக்கியதால் அந்த மீனால் மேற்கொண்டு நீந்த முடியவில்லை. அசைந்து அசைந்து போராடும் அந்த மீனை ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் காப்பாற்றி நீரில் விடுகின்றனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து நம் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ உயிரிழப்புக்கு நாம் இப்படித்தான் காரணமாக இருக்கிறோம் என பதிவிட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இனிமேலும் நெகிழியை பயன்படுத்தாமல் கடல்வாழ் உயிரினங்களை காக்க வேண்டுமென வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.