காஸாவில் தீவிரமடையும் பட்டினி.. பசியில் துடிதுடிக்கும் குழந்தைகள்!
உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்து இல்லை... கண் முன்னே குழந்தை பசியில் துடிக்கிறது... வயதான பெற்றோர் உணவின்றி மூலையில் சுருண்டு படுத்துகிடக்கின்றனர்... எங்கு திரும்பினாலும் அழிமானங்கள்... நரக வாழ்வை வாழ்கின்றனர் காஸா மக்கள். உணவுப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்காகக் காத்திருக்கும் மக்கள், மாவு மூட்டைகளை எடுக்க ஒருவரோடு ஒருவர் போட்டியிடும் காட்சிகள், மாவு மூட்டைகளை மக்கள் சுமந்து செல்லும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள், அங்கு நிலவும் பட்டினிச் சூழலை முகத்தில் அறைந்தாற்போல் காட்டுகின்றன.
காஸாவில் மனிதாபிமானப் பேரழிவு நிகழ்ந்து வருவதாக ஐ.நா.வின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைக் குழு (IPC) எச்சரித்துள்ளது.
காஸாவில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் நோய்கள் பரவலாகி, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன என்றும் இது இந்த நூற்றாண்டில் கண்டிராத ஒரு பேரழிவு எனவும் உலக உணவுத் திட்டத்தின் அவசரகால இயக்குநர் ராஸ் ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையின்படி, காஸாவில் மூன்று பேரில் ஒருவர் உணவு இல்லாமல் பல நாட்கள் செலவிடுகிறார். ஏப்ரல் மாதத்திலிருந்து 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டுள்ளன.
ஜூலை மாதத்தில் மட்டும் 16 குழந்தைகள் பசியால் உயிரிழந்துள்ளன. உணவு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை காஸாவிற்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று ஐ.நா.வும் பிற அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காஸாவில் பரவலான மரணங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.