
பிரேசிலை சேர்ந்தவர் இமானுவேலா. இளம்பெண்ணான இவர், ஒருநாள் தாம் வசிக்கும் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரிமிருந்த செல்போனை ஒரு திருடன் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இமானுவேலா செல்போனைப் பறிகொடுத்த அதிர்ச்சியில், ‘திருடன்... திருடன்’ எனக் கத்தியுள்ளார். ஆனால் அதற்குள் திருடன் தப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த செல்போனைப் பார்த்த அந்த திருடன், இமானுவேலாவின் புகைப்படத்தைக் கண்டு காதல்வயப்பட்டுள்ளார்.
’இப்படியான ஓர் பெண்ணிடமா நாம் தவறு செய்துவிட்டோம். அவருடைய போனைத் திருடியது தவறு’ என எண்ணி வருந்தியுள்ளார். பின்னர் இமானுவேலாவின் செல்போனில் இருந்த தகவல்கள் மூலம் அவரை கண்டுபிடித்துள்ளார். தொடர்ந்து தாம் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார் அத்திருடன். அத்துடன், அவருடைய போனையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்த செய்கைகளால் இமானுவேலாவுக்கு அந்த திருடனைப் பிடித்துப் போயுள்ளது. இதையடுத்து இருவரும் இதங்களைப் பரிமாறிக் கொண்டு அன்றுமுதல் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்!
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் இமானுவேலாவும், அவரது காதலரும் தாங்கள் காதலில் வயப்பட்ட முதல் தேதி குறித்து ஒரு ஊடக நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அப்போது தாங்கள் காதலில் விழுந்த சுவாரஸ்ய கதையையும் தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த நிகழ்வில் இமானுவேலா, “அன்றைய தினம் நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என் செல்போன் திருடுபோனதால் ஏமாற்றத்திற்கு ஆளானேன்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு இமானுவேலாவின் இதயத்தைத் திருடிய காதலர் (அந்த திருடர்), “எனக்கு ஒரு காதலி இல்லாததால், நான் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தேன். அந்த சமயத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.
இமானுவேலாவின் போட்டோவை அவருடைய போனில் பார்த்தேன். ‘என்ன அழகு? இப்படி ஓர் அழகியை, நாம் தினமும் பார்க்க மாட்டோமா’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர், அந்த போட்டோவைப் பார்த்தபிறகு மனம் மாறி, போனைத் திருடியதற்காக வருத்தப்பட்டேன்” எனச் சொல்லியிருக்கிறார். போனைத் திருடி பெண்ணின் இதயத்தில் இடம்பிடித்த இந்த சம்பவத்தை பிரேசில் மக்கள் மட்டுமல்ல, வலைத்தள பயனர்களுமே நம்ப மறுக்கிறார்கள்.
இதுகுறித்து வலைதள பயனர்கள் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். ’பிரேசிலில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும்’ என பயனர் ஒருவர் பதிவிட, ’இது உண்மை என்று நம்புவது கடினம்’ என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ’இதைப் பார்த்து எனக்குச் சிரிப்பதா.. அழுவதா என்று தெரியவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் சிலரோ, ‘பிரேசிலில், ஒரு குற்றவாளியைக் காதலிப்பது இயல்பானது’ என்றும், ’அன்பினால் எதையும் சாதிக்க முடியும்’ எனப் பதிவிட்டுள்ளனர்.