
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கலிபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்துவருகிறது. அங்கு புதிதாக உருவாகும் நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு டிசம்பர் 21 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் இருந்தால் இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உணவகங்களிலிருந்து உணவுகளை பார்சல் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.