அகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி

அகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி

அகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி
Published on

அமெரிக்காவில் அகதிகள் மீது கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது உயிருக்கு பயந்து தாய் ஒருவர் குழந்தைகளுடன் ஓடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அடைக்கலம் கேட்டு அமெரிக்காவை நோக்கி புலம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது அவர்கள் அனைவரும் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையிலான எல்லைப் பகுதியில் தங்கியுள்ளனர். நீண்ட நாட்கள் கடந்தும், அவர்களுக்கு அடைக்கலம் தர அமெரிக்கா மறுத்து வருகிறது. இதனால் பொறுமையிழந்த அகதிகள், மெக்சிகோ அதிகாரிகள் தடுத்தும் கேளாமல், திஜுவானா அருகே இருக்கும் அமெரிக்க எல்லையை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர்.

எல்லைப் பகுதியில் காத்திருந்த அமெரிக்க படையினர், அவர்களை மீண்டும் மெக்சிகோவுக்கு விரட்டி அடிப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், உயிருக்கு பயந்து ஏராளமானோர் மீண்டும் மெக்சிகோ பகுதிக்கு சிதறி ஓடினர். அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட நிருபர் கிம் ஹுன் எடுத்த ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் தற்போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

டயப்பர் அணிந்த இரு குழந்தைகளை, ஒரு தாய் கண்ணீருடன் அங்கிருந்து அழைத்து ஓடுவது, அந்தப் புகைப்படத்தில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. அவசரத்தில் கால்களில் அணிந்திருந்த காலணிகளையும் அந்தக் குழந்தைகள் விட்டுவிட்டு அச்சத்துடன் அங்கிருந்து ஓடுவது பலரது கண்களை குளமாக்கி இருக்கிறது. 

குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல், அவர்களை ஒரு குற்றவாளிகளை போல அதிபர் ட்ரம்ப் விரட்டி அடிக்க முற்பட்டது ஏன் என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டுக்கு அடைக்கலம் கேட்டு வருவதில் என்ன குற்றம் இருக்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் ஆவேசப்பட்டுள்ளனர். புகைப்படத்தில் உள்ள அந்தப் பெண்ணின் பெயர் மரியா மெஸா என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

ஆன்லைன் செய்தி தளத்துக்கு பேட்டியளித்திருக்கும் அந்தப் பெண் அமெரிக்க படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும் தாம் மிகுந்த அச்சமடைந்ததாக தெரிவித்துள்ளார். குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், அங்கிருந்து கண் மூடித்தனமாக ஓடியதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுவால், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பீதியடைந்து விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கு அடைக்கலம் தராவிட்டாலும், அவர்களை காயப்படுத்தாமல் இருப்பது தான் தற்போது அமெரிக்கா முன்னெடுக்கும் நல்ல விஷயமாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com