‘வழி மறந்துபோச்சு!’ மழையில் வழிமாறி எருமைக்கூட்டத்துடன் இணைந்த யானைக்குட்டி! க்யூட்டான வீடியோ
செய்தியாளர் : காந்தகுமார்
பல கதைகளில் ஆட்டுக்கூட்டத்துடன் சிங்கக்குட்டி சேர்ந்ததாகப் படித்திருப்பொம். குழந்தைகளுக்கு பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு யானைக்குட்டி தன் கூட்டத்திடம் இருந்து பிரிந்து எருமைகள் கூட்டத்துடன் இணைந்துள்ளதும் நடந்துள்ளது.
இலங்கையில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் மழையின் காரணமாக மகாவலி ஆறு மற்றும் திவுலான வில்லுவ அணைக்கட்டு நிரம்பி வழிவதால் அங்குள்ளா காடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமைகளின் கூட்டத்துடன் சேர்ந்திருக்கிறது. இந்த யானைக்குட்டி எருமைகளுடன் சேர்ந்து திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
4 அல்லது 5 வயதுடைய சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த யானைக் குட்டி, சோமாவதி யானைகள் சரணாலயத்தில் வழமையாக உலாவித்திரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையிலேயே சீரற்ற வானிலை காரணமாக, தமது கூட்டத்தில் இருந்து பிரிந்து, திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு எருமைக் கூட்டத்துடன் வந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள், மன்னம்பிட்டிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, யானைக்குட்டியை காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.