மூன்றாவது திருமணமா?.. சிங்கப்பூர் காவலர் மீது முன்னாள் மனைவிகள் கொடுத்த அதிர்ச்சி புகார்!

மூன்றாவது திருமணமா?.. சிங்கப்பூர் காவலர் மீது முன்னாள் மனைவிகள் கொடுத்த அதிர்ச்சி புகார்!

மூன்றாவது திருமணமா?.. சிங்கப்பூர் காவலர் மீது முன்னாள் மனைவிகள் கொடுத்த அதிர்ச்சி புகார்!
Published on

தூத்துக்குடியில் அப்பாவி பெண்களை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டிவிட்டதாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர், அதில் ஒருவர் தான் முகமது ரஃபீக். அப்துல் காதர், சிங்கப்பூரில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன் அங்கு மணி எக்ஸ்சேஞ்ச் (பண பரிவர்த்தனை) தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அப்துல் காதர் அங்கு குடும்பத்துடன் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவரது மகன் ரஃபீக் சிங்கப்பூர் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த தஸ்னீமா என்ற பெண்ணை ரூ.2.5 கோடி செலவில் ரஃபீக் ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தின் போது, 150 சவரன் நகை, 5 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட லட்சக்கணக்கான பணம் ஆகியவற்றை மாப்பிள்ளை ரஃபீக் வரதட்சணையாக பெற்றுள்ளார்.

இதையடுத்து புதுமணத் தம்பதிகளாக இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர். ஆனால், வந்திறங்கிய சில நாட்களிலேயே தஸ்னீமா-வின் நடவடிக்கைகள் சரியில்லை, மனநிலை சரியில்லை என்று ஏதேதோ காரணங்கள் கூறி அவரை சொந்த ஊருக்கு ரஃபீக் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், திருமணத்தின் போது வரதட்சணையாக போட்ட நகை மற்றும் பரிசுப் பொருட்கள் என எதையும் திருப்பித் தரவில்லை. ஆனால், விவாகரத்து நோட்டீஸ் மட்டும் அனுப்பி இருந்தார்.

இதுதொடர்பாக, தஸ்னீமா வீட்டார் சிங்கப்பூர் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அபர்நிஷா என்ற பெண்ணை ரஃபீக், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த திருணமத்திற்கு பெண் வீட்டார் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சிங்கப்பூர் காவலரான ரஃபீக் முதல் மனைவிக்கு என்ன செய்தாரோ அதைத்தான் இரண்டாவது மனைவிக்கும் செய்திருக்கிறார். அதாவது, இரண்டாவது மனைவியுடன் சிங்கப்பூர் வந்து ஒரு மாதம் குடும்பமும் நடத்திவிட்டு, பிறகு அபர்நிஷா நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி அவரையும் அவரது சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை வைத்துக் கொண்டு திருப்பி அனுப்பிய ரஃபீக், மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதையறிந்த அபர்நிஷா பெற்றோரும் சிங்கப்பூர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மூன்றாவது திருமணம் செய்ய ரஃபீக் இந்தியா வந்த நிலையில், முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் அவர்களது குடும்பத்தினருடன் வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து இரு குடும்பத்தினரும் ரஃபீக் மீது திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். ஆனால், ரஃபீக் சிங்கப்பூர் காவல் அதிகாரி என்பதால், அவர் மீது எப்படி புகார் எடுப்பது என்று மகளிர் போலீசார் தயங்கியதாக சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் சம்சுதீன் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரஃபிக்கை கைது செய்து வரதட்சனையாக கொடுத்த பொருட்களை மீட்டு தரவேண்டும் இதுபோன்று வேற எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது எனவே உடனடியாக ரஃபிக்கை கைது செய்து தமிழகம் கொண்டு வந்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் சம்சுதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது மகள் அமீர்நிஷாவை சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் முகமது ரஃபீக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம்.

திருமணத்தின் போது 101 பவுன் தங்க நகை, ரோலக்ஸ் வாட்ச் மற்றும் 13,977 சிங்கப்பூர் டாலர், பிளாட்டின மோதிரம், ரொக்க தொகையாக 5000 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளோம்.

ஆனால், இவர், திருமணமான ஒரு மாதத்திற்குள் குடும்பத்துடன் பெண்ணை கொடுமைபடுத்தி தலாக் நோட்டீஸ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார். மேலும் நகையையும், சான்றிதழ்களையும் அபகரித்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு 3வது திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. மீண்டும், மீண்டும் இதுபோல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அவரை, இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com