பதப்படுத்தப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்ட 9 பேர் மரணம் : சீனாவில் அதிர்ச்சி!
சீனாவில் பிரீசரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹீரோங்ஜிலாங் மாகாணம் ஜிக்சி நகரை சேர்ந்த குடும்பத்தினர் 12 பேர் அக்டோபர் 5ஆம் தேதி ஒன்று கூடியிருக்கின்றனர். அவர்கள் காலை உணவுக்கு நூடுல்ஸ் சூப்பை தயார் செய்திருக்கின்றனர். அந்த சூப்பின் சுவை நன்றாக இல்லை என்றுக்கூறி 3 சிறுவர்கள் அதை சாப்பிட மறுத்திருக்கின்றனர்.
அதை சாப்பிட்ட அனைவருக்கும் ஃபுட் பாய்ஸன் ஏற்பட்டிருக்கிறது. அதில் 7 பேர் அக்டோபர் 10ஆம் தேதியே இறந்துவிட்டனர். அடுத்த நபர் இரண்டு நாள் கழித்து இறந்திருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி நபரான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி அக்டோபர் 19ஆம் தேதி இறந்துவிட்டதாக அந்த பெண்ணின் மகன் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
விசாரித்ததில், புளித்த சோளமாவு கலந்த நூடுல்சை தயார் செய்து, அதனை ஒரு ஆண்டிற்கும் மேலாக ஃபிரீசரில் பதப்படுத்திவைத்து இருந்திருக்கின்றனர். அதனை அண்மையில் சமைத்து சாப்பிட்டதால் குடும்பத்திலுள்ள அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த உணவில் போங்க்ரெக்கிக் அமிலம் இருந்ததே அவர்களது இறப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.