அமெரிக்கா: அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுத்த அரசு
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கு அருகே 8.2 என்ற ரிக்டர் அளவில் ஒரு திசையிலும், 7.2 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு திசையிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு (United States Geological Survey) மையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க அரசு, அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களுடைய அந்த எச்சரிக்கை அறிக்கையில், “இந்தளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், அபாயகராமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்தில் சில கடற்கரைகளில் உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தால் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதென்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இந்த நிலநடுக்கம், பெர்ரிவில்லே என்ற சிறு கிராமத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 56 மைல் தள்ளி ஏற்பட்டுள்ளது. ஆகவே தென் அலாஸ்காவுக்கும், அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெர்ரிவில்லே, அலெஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆன்கோரேஜ் பகுதியை ஒட்டியதென்பதால், அங்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு முன் கடந்த அக்டோபரில் 7.5 என்ற அளவில் அலாக்ஸாவின் தெற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விழிப்புணர்வு இருந்ததால், உயிர்சேதம் தடுக்கப்பட்டது.