திருடனுக்கு ‘பஞ்ச்’ கொடுத்து ஓடவிட்ட தாத்தா..! - வைரல் வீடியோ
77 வயதான முதியவர் திருடனை அடித்து ஓடவிட்ட நிகழ்வு இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் கார்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் பணம் எடுக்க முதியவர் ஒருவர் வந்திருந்தார். பணம் எடுத்துக்கொண்டு திரும்பிய அந்த 77 வயது முதியவரை திருடன் ஒருவன் வழிமறித்தான். அத்துடன் முதியவரின் கழுத்தை நெரித்து பணம் மற்றும் ஏடிஎம் கார்டையும் தருமாறு மிரட்டினான். திருடனின் மிரட்டலுக்கு கொஞ்சமும் அஞ்சாத முதியவர் அவனை எதிர்த்து தாக்கத் தொடங்கினார்.
ரியல் பாக்ஸர் போல தனது கைகளை மடக்கி கொண்டு திருடன் முகத்தில் ஒரு குத்துவிட்டார் அந்த முதியவர். இதனை சற்றும் எதிர்பாராத அந்தத் திருடன் அதிர்ச்சி அடைந்து முதியவரை விட்டு பின்நோக்கி சென்றான். அப்போது முதியவர், “முடிஞ்சா கிட்ட வா” என்பது போல், கை அசைத்தப்படி திருடனை அழைத்தார். ஆனால், முதியவரின் இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ந்து போன திருடன் இறுதியில் வெறும் கையுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இந்த நிகழ்வு முழுவதும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், முதியவர் திருடனிடம் துணிச்சலாக சண்டையிட்ட சிசிடிவி காட்சியை நேற்று இங்கிலாந்து போலீஸ் தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ சில மணி நேரத்திலேயே 2 லட்சத்துக்கு அதிகமான நெட்டிசன்களால் பார்க்கப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதியவரின் துணிச்சலான தாக்குதலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுபோன்றுதான் திருடர்களிடம் எதிர்த்து நின்று போராட வேண்டும் என முதியவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.