அரசு ஊழியர்கள் என நினைத்து இந்திய பொறியாளர்களை கடத்திய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் 7 பேரை, அரசு ஊழியர்கள் என நினைத்து தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் மாகாணத்தின் மின்நிலையம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மின் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பஸ் மூலம் மின்நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்த பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநருடன் கடத்திச் சென்றனர்.
இதுபற்றி, பாக்லான் மாகாண கவர்னர் அப்துலாஹி நேமதி கூறும்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி, டேண்ட் ஏ சகாபுதீன் பகுதியில் வைத்துள்ளனர் என்றும் உள்ளூர் மக்கள் மூலம் அவர்களிடம் அதிகாரிகள் பேசியதாகவும் அரசு ஊழியர்கள் என நினைத்து தவறுதலாக கடத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பழங்குடி இன தலைவர்களை கொண்டு தலீபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

