\
6,000 Seafarers Trapped in Hormuz; UN Issues Appeal
HormuzPt web

உணவு, தண்ணீர் இல்லை.. ஹார்முஸில் சிக்கியுள்ள 6,000 மாலுமிகள்.. வெளியேற்ற ஐநா அழைப்பு!!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட கப்பல்களில் 6,000க்கும் அதிகமான மாலுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தியிருக்கிறது.
Published on

ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை முடங்கியிருக்கிறது. இதன்காரணமாக, ஹார்முஸ் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஹார்முஸ் நீரிணை மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.

ஹார்முஸ்
ஹார்முஸ்கோப்புபடம்

சமீபத்தில், ஐ.நா. கடல்சார் அமைப்பு (UN shipping agency) வெளியிட்ட தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 59 வணிகக் கப்பல்கள் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன எனவும் இந்தத் தாக்குதல்களில் 17 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 400 கப்பல்களில் சிக்கித் தவிக்கும் 6,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

வோல்கர் டார்க்
வோல்கர் டார்க்X

இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டார்க் (Volker Türk) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள மாலுமிகள் கடுமையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை நேரடியாக மீறும் செயல். இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், ஹார்முஸில் சிக்கியுள்ள மாலுமிகளுக்கு அத்தியாவசிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிலைமை சீரானதும் அவர்களை பாதுகாப்பாக தரையிறக்கி தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம், பல கப்பல்களால் மோதல் பகுதியை விட்டு வெளியேற முடியாமல் உள்ள நிலையில், சில கப்பல் உரிமையாளர்கள் தங்கள் மாலுமிக் குழுவினரை ஊதியம், தாயகம் திரும்புதல் அல்லது அடிப்படைத் தேவைகள் இன்றி கைவிட்டுவிட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியிருக்கிறது.

சமீபத்தில், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ளன. அவற்றில் பணியாற்றும் சுமார் 6,000 மாலுமிகள் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் பல வாரங்களாக தவித்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஐநா அறிக்கை வெளியாகியிருக்கிறது.

6,000 Seafarers Trapped in Hormuz; UN Issues Appeal
நீட் போராட்டத்தின் முகமான சிங்கப் பெண்கள்.. அதிரும் காவல்துறை.. பங்கு என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com