“நகரங்களில் 52% இளைஞர்கள் இருமொழி பேசுகின்றனர்”- ஆய்வில் தகவல்
இந்திய நகரங்களில் வசிக்கும் 52% இளைஞர்கள் இரண்டு மொழியை தெரிந்து வைத்திருப்பதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இன்றைய தலைமுறையினர் தாய்மொழி மட்டுமல்லாமல் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மொழிகளை கற்று வருவதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. நகரத்தில் வசிக்கும் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 50%க்கும் அதிகமானோர் இரு மொழி பேசுபவர்களாக இருப்பதாகவும், கிராமப்புறங்களில் அதே வயதுக்குட்பட்டவர்களில் 25% இருமொழி பேசுபவர்களாக இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
புள்ளிவிவரத்தின் படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25% இரு மொழி பேசுபவர்களாகவும், 7% மும்மொழி பேசுபவர்களாவும் இருக்கின்றனர். இது நகரம், கிராமம் என்று பிரிக்கப்பட்டால் மிகப்பெரிய வித்தியாசத்தை கொடுத்துள்ளது. அதன்படி நகரத்தில் 44%பேர் இருமொழியும், 15% பேர் மும்மொழியும் பேசுகின்றனர். கிராமப்புறங்களை பொறுத்தவரை 22% இருமொழி பேசுபவர்களாகவும், வெறும் 7% பேர் மும்மொழி பேசுபவர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயது வரை உள்ளவர்களிடையே கிராமம், நகரம் என பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தான் இருமொழி, மும்மொழி என வித்தியாசங்கள் வருவதாகவும், வேலை நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்வதும், வேலைக்காக வேறு மொழிகளை கற்பதும் இந்த வித்தியாசத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ளவர்களை காட்டிலும் நகரத்தில் வசிப்பவர்களுக்கு மொழியைக் வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதால் அவர்கள் மொழியை எளிதில் கற்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 20-24 வயதுக்குட்பட்டர்களே அதிக அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசுகின்றனர். வயது வித்தியாசம், பாலினம் அடிப்படையில் மொழி அறிந்தவர்களின் மொத்த சதவீதம் மாறுபடுகிறது. கிராமப்புறங்களை பொறுத்தவரை பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை தெரிந்து வைத்துள்ளனர். பொதுவாக கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் தங்கள் தாய்மொழியை மட்டுமெ அவர்கள் தெரிந்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தை பொறுத்தவரை பாலின வேறுபாடு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்றும் புள்ளிவிவரத்தின் படி டைம்ஸ் ஆப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.