30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து - சோகத்தில் மூழ்கிய நேபாளம்

30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து - சோகத்தில் மூழ்கிய நேபாளம்
30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து - சோகத்தில் மூழ்கிய நேபாளம்

கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது உள்ளது.

எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இரட்டை எஞ்சின் கொண்ட ஏடிஆர் 72 விமானம், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10:33 மணிக்கு பொக்காரா நோக்கி புறப்பட்டது. 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் வந்து கொண்டிருந்த இந்த விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் அங்குள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே அங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே உள்ள விமான பயண தூரம் வெறும் 25 நிமிடங்கள் தான்.

நதிக் கரை மற்றும் மலைப்பிரதேசத்தில் விமானம் விழுந்ததாலும், கடும் புகை மண்டலமாக காணப்பட்டதாலும் உடனடியாக மீட்புப் பணி மேற்கொள்ளப்பட முடியவில்லை. இருப்பினும் மீட்புக் குழுவினர் கடுமையாக போராடி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர் மற்றும் வெளிநாட்டவர்கள் 15 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 5 பயணிகள், ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், தென்கொரியாவை சேர்ந்த 2 பயணிகள், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிறுவன அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த இந்த 5 இந்தியர்களும் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான சோனு ஜெய்ஸ்வால், விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திற்கு முன்பு ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டுள்ளார்.

தகவலறிந்ததும், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகால் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். மேலும் நேபாள அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து போக்கரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு, வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் விமான சேவையை பொறுத்தவரை பாதுகாப்பு மேலாண்மை, ஊழியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அந்நாட்டு விமானங்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விமான விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. நேபாள நாட்டை விமான பாதுகாப்பிற்கான கருப்பு பட்டியலில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் சேர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நேபாளத்தில் இருந்து வரும் விமானங்கள் தங்களது வான்வெளிக்குள் பயணிக்கக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நேபாளம் நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com