
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி என அடுத்தடுத்த இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது. இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்தது, மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலாவேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது.
20 அடி உயரத்துக்கும் மேலாக எழும்பிய பேரலைகள் குடியிருப்புப் பகுதிகளில் பல மீட்டர் தொலைவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. ஏராளமான வாகனங்களும் பொருட்களும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். இந்நிலையில் சுனாமியில் சிக்கி இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உடல்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் தன்னார்வலர்களும் கரம் கோர்த்துள்ளனர். குவியல் குவியலாக உள்ள உடல்களில் தனது உறவினர்களை அடையாளம் காண மக்கள் தவிக்கும் தவிப்பு காண்போர் கண்களை குளமாக்குகிறது. இயற்கை பேரிடர் விட்டுச்சென்றுள்ள ரண தழும்புகள் ஒரு புறமிக்க, பாதிப்புகள் குறித்து அச்சமடையாமல் அமைதி காக்க வேண்டும் என இந்தோனேசிய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.