பிரேசிலில் அணை உடைந்து 40 பேர் பலி: 300 பேர் மாயம்!
பிரேசிலில் அணை உடைந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேரை காணவில்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
பிரேசில் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பெலோ ஹரிஜோண்டே என்ற நகரம் உள்ளது. இதன் அருகே, ‘வாலே’ என்ற தனி யார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இதன் அருகே நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அணை இருந்தது. சுரங்கம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
மதிய நேரத்தில் சுரங்க தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வந்த உணவு விடுதியில் தொழிலாளர்கள் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பழைய அணை, திடீரென உடைந்தது. அதில் இருந்த சகதி நிறைந்த தண்ணீர், வெள்ள மாக பெருக்கெடுத்து ஓடியது.
இதில், அங்கிருந்த சாலைகள், தொழிலாளர்களின் குடியிருப்புகள் சின்னாபின்னமாகின. அனைத்தும் சகதிக்குள் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு மீட்பு படையினர் குவிந்த னர். இடுப்பளவு சகதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்களை அவர்களை பத்திரமாக மீட்டனர். இருந்தும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேரை காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வாலே நிறுவன அதிகாரி ஃபேபியோ ஷ்வார்ட்மேன் கூறும்போது, “இது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. விபத்து நடந்த பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணா மல் போன மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது’’ என்றார்.
மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.