விசா இல்லாமல் பயணம்.. 40 நாடுகளுக்கு பச்சைக் கொடி காட்டிய இலங்கை!
’இந்தியப் பெருங்கடலின் கண்ணீர்த்துளி’ என்று அழைக்கப்படும் இலங்கை, நமது நாட்டின் அண்டை நாடாக உள்ளது. இந்த நாடு, அளவில் சிறியது என்றாலும், அழகில் பெரியதாக இருக்கிறது. தங்கக் கடற்கரைகள், பசுமையான நிலப்பரப்புகள், காட்டு சஃபாரிகள் மற்றும் பழங்கால கோயில்கள் எனப் பலவற்றைக் கொண்டிருக்கும் இந்த நாடு, சுற்றுலாப் பயணிகளை இழுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தன் நாட்டுச் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் வகையில், விசா இல்லாத பயணத் திட்டத்தை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. முன்னதாக, இந்த திட்டத்தை வெறும் 7 நாடுகளுக்கு மட்டுமே வழங்கியிருந்தது.
விசா இல்லாத பயணத் திட்டம் என்பது ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது எந்த விசா கட்டணத்தையும் செலுத்தவோ தேவையில்லை. வெறும் பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும். இத்தகைய திட்டத்தைத்தான் இலங்கையும் செயல்படுத்தி உள்ளது. இதேபோன்று, தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் இன்னும் சில நாடுகள் விசா இல்லாத பயணத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இதன்மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் எனவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் எனவும் அது நம்புகிறது. அந்த வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “விசா இல்லாத பயணக் கொள்கை நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும். இதன்மூலம், நாங்கள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் சுற்றுலாவில் கொள்கை மாற்றங்கள் மூலம், வருகையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விசா இல்லாத பயணத் திட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், ஈரான், நார்வே, தென் கொரியா, ஸ்வீடன், ஆஸ்திரியா, பின்லாந்து, டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, நேபாளம், பிரான்ஸ், செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், பெலாரஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத் மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும்.
விசா கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் அந்த நாடு ஆண்டுதோறும் சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரிடும். இருப்பினும், அவர்கள் இந்தப் பணத்தை நேரடியாக இழக்க நேரிட்டாலும், இப்போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று இலங்கை நம்புகிறது.