கலிபோர்னியா காட்டுத் தீ: 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலான பரிதாபம்

கலிபோர்னியா காட்டுத் தீ: 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலான பரிதாபம்
கலிபோர்னியா காட்டுத் தீ: 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலான பரிதாபம்

கலிபோர்னியாவில் காட்டுத் தீ என்பதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. அண்மையில் இம்மாகாணத்தில் நேரிட்ட காட்டுத் தீயில் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து கருகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளைவிட இது இருமடங்கு பெரியது என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.அதிக மக்கள்தொகையைக் கொண்ட கலிபோர்னியாவில் இந்த ஆண்டில் மட்டும் ஆறு மிகப்பெரிய காட்டுத் தீயால் மிகப்பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர். வறண்ட சூழலுடன் இணைந்த வெப்பக்காற்று மற்றும் உலர் மின்னல்களை விளைவிக்கும் புவி வெப்பமயமாதல்தான் காட்டுத்தீக்குக் காரணம் என பருவநிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் காட்டுத் தீயில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். 8, 454 வீடுகளும் கட்டுமானங்களும் முற்றிலும் அழிந்துள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டில் 2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் தீயில் பாதிக்கப்பட்டன. அப்போது மக்கள் 85 பேர் பலியானார்கள். 19 ஆயிரம் கட்டுமானங்கள் தீயில் கருகி அழிந்தன.

"என்ன நடக்கிறது, தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை" என்று துயரத்துடன் பேசுகிறார் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் மெக்லீன். ஏற்கெனவே கலிபோர்னியா 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் வறட்சியை சந்தித்தது. அப்போது ஏற்பட்ட நோய்கள் மற்றும் பூச்சிகளால் மில்லியன் கணக்கில் மரங்கள் அழிந்துபோயின.

உலகின் புகழ்பெற்ற திராட்சை பள்ளத்தாக்கான நாப்பா கவுண்டியில் உள்ள பனிரெண்டுக்கும் அதிகமான ஒயின் ஆலைகள் தீயால் சேதமடைந்தன. புகையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கும் திராட்சை ரகங்களை விவசாயிகள் தேடிவருகிறார்கள். தற்போது கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் மழையால் சற்று வானிலை மாறக்கூடும் என்ற நம்பிக்கையில் தீயணைப்புத் துறையினர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com