
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) கட்சி சார்பில் அரசியல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கட்சியானது, தற்போதைய பாகிஸ்தான் கூட்டணி அரசில் ஓர் அங்கமாக உள்ளது. இது, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முக்கியமான கட்சி என்பதால் இந்த மாநாட்டில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், வெடிகுண்டு வெடித்ததில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 130க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலத்த காயமடைந்தவர்கள், விமானங்கள் மூலம் பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு தற்கொலை படை தாக்குதல் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஆதிக்கம் என சொல்லப்படுகிறது. ஆகவே அந்த அமைப்பு இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் கட்சியின் தலைவர் மெளலானா ஃபஸ்லூர் ரஹ்மான் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆரிப் அல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சமீபகாலமாக அடிக்கடி குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.