\
331 Children Contracted HIV From Syringe Reuse In Pakistan Hospital
model imagex page

ஒரே ஊசி.. 331 குழந்தைகளுக்கு HIV.. பாக். மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

மருத்துவமனை ஒன்றில் சுகாதார விதிகளை மீறி, பயன்படுத்தப்பட்ட ஊசிக் குழாய்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் புலனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
Published on

பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதன் காரணமாக 331 குழந்தைககள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: விக்னேஷ்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மருத்துவ ஊழியர்கள், பல நோயாளிகளுக்கு ஒரே ஊசிக் குழாயைப் பயன்படுத்தியது ரகசிய கேமரா ஆய்வில் அம்பலமாகியுள்ளது. இந்த சுகாதாரச் சீர்கேட்டால் இதுவரை 331 குழந்தைகள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 32 மணிநேரம் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்களில், மருத்துவமனை ஊழியர்கள் கையுறைகளை அணியாமலும், பயன்படுத்தப்பட்ட ஊசிகளைக் கொண்டு மருந்துகளைச் செலுத்துவதும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் இந்த ஆதாரங்களை மறுத்துள்ளது. அந்த வீடியோக்கள் பழையவை அல்லது ஜோடிக்கப்பட்டவை என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதே பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டிலும் ஒரு மருத்துவர் பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் சுமார் 900-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு HIV பரவியது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர். உணவுக்கே வழியில்லாத தங்களுக்கு, குழந்தையின் மருத்துவச் செலவு பெரும் சுமையாக இருப்பதாக அவர்கள் குமுறுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பாகிஸ்தானின் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மருத்துவ ஒழுங்குமுறைகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com