வித்தியாசமான முகப்பு பக்கம்.. 320 ஆண்டுகள் பழைமையான செய்தித்தாள் நிறுத்தம்.. பயனர்கள் ஏமாற்றம்!

வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு 320 ஆண்டுகள் வெளியான செய்தித்தாள் ஒன்றின் அச்சுப் பதிப்பு நிறுத்தப்பட்டது பலரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
Wiener Zeitung
Wiener Zeitungtwitter

டிஜிட்டல் வருகையினால் உலகளவில் அச்சுப் பணிகளுக்கான மவுசு குறைந்து வருகிறது. குறிப்பாக, ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது.

Wiener Zeitung
Wiener Zeitungtwitter

வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. 1703ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் செய்தித்தாள், நேர்மறையான செய்திகளைப் பிரசுரித்து வந்தது. ஆரம்பத்தில் "Wiennerisches Diarium" என்று அழைக்கப்பட்ட இந்த செய்தித்தாள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகள், பண்பாடு மற்றும் வணிகச் செய்திகளில் விரிவான கட்டுரைகளை வெளியிடுவதில் பெயர்பெற்று விளங்கியது.

தொடர்ந்து பத்திரிகை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய ’வீனர் ஜெய்டுங்’ சமீபத்தில் நிகழும் தொழில் நுட்ப மாற்றங்களால் சிக்கல்களை எதிர்கொண்டது. டிஜிட்டல் வருகையினால் இதன் அச்சுப் பதிப்பு நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்த நிதிச் சிக்கலால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த 63 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தலைமை அதிகாரிகளையும் 20 நபராகக் குறைத்தது. எனினும், தொடர்ந்து அந்த நிறுவனம் நிதிச் சுமையைச் சந்தித்ததை அடுத்து, அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி, அந்த நிறுவனம் நேற்று (ஜூன் 30) தன்னுடைய இறுதிப் பதிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று வெளியிட்ட அந்தப் பதிப்பின் முதல் பக்கத்தில், வாசகர்களுக்கும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்களுக்கும் நன்றி செலுத்தியது. மேலும், அதில் ’1,16,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 ஜனாதிபதிகள், 10 கைசர்கள், 2 குடியரசுகள், 1 செய்தித்தாள்’ எனப் புகழுரை வழங்கியுள்ளது.

Wiener Zeitung
Wiener Zeitungtwitter

’வீனர் ஜெய்டுங்’ செய்தித்தாளின் அச்சுப் பதிப்பு நிறுத்தப்பட்டது ட்விட்டரில் பலரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதுகுறித்து பயனர் ஒருவர், “இந்தச் செய்தித்தாளைக் கண்டுபிடித்து நான் பாதுகாக்கப் போகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனரோ, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை டேக் செய்து, ”உங்களால் பழைமையான செய்தித்தாளை வாங்க முடியுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவரோ, "இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், அது ஆன்லைனில் இருக்கும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com