பாலஸ்தீனத்தில் மீண்டும் பதற்றம்: இரு பிரிவினரிடையே மோதல்.. உள்நாட்டு சண்டையில் 32 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச அமைதி பரிந்துரையின் படி போர் நிறுத்தப்பட்டு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டனர். அது தொடர்பான கட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
போரின்றி நிம்மதியாக வாழலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த காசா மக்கள் தலையில் இடி விழுந்தது போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த திங்களன்று, ஹமாஸ் அமைப்பினருக்கும், காசாவின் ஆயுதமேந்திய குழுவான டக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே சப்ரா பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், 27 முதல் 32 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வருகின்றன. இம்மோதலில் ஹமாஸ் ஆதரவு சமூக ஊடக பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வாக்கு மிகுந்த டக்முஷ் பிரிவினர், காசாவில் நீண்டகாலமாக ஹமாசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இருதரப்பிடையே பலமுறை மோதல் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இரண்டு ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவும், குறிப்பிட்ட பகுதியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஹமாஸ் இந்த மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.வெடிகுண்டு சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் இன்றி இனி நிம்மதியாக வாழலாம் என நிம்மதி பெருமூச்சு விட்ட காசா மக்களுக்கு, உள்நாட்டு சண்டை பேரிடியை தந்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தரும் வகையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போராக மாறியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் இந்த உள்நாட்டு மோதல் மேலும் அம்மக்களை கவலையடைய செய்திருக்கிறது.