ஆஸ்திரியா நாட்டில் வெற்றிபெற்றுள்ள உலகின் இளம் பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரியா நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 31 வயதான கன்சர்வேடிவ் மக்கள் கட்சியின் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.
தேர்தலில் கன்சர்வேடிவ் மக்கள் கட்சி 31 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்த காரணத்தினால் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய குர்ஸ், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்து விட்டது என தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த குர்ஸ், கடந்த மே மாதம் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன் தமது 27-வது வயதில், நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் குர்ஸ் பதவி வகித்துள்ளார். குர்ஸ், கனடாவின் ஜஸ்டின், பிரான்ஸின் மக்ரோனுக்கு இணையான இளம் தலைவராக ஒப்பிடப்படுகிறார்.
அவருக்கு உலகத் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.