30000 இந்தியர்கள் விசா முடிந்தும் அமெரிக்காவிலிருந்து கிளம்பவில்லை
இந்தியர்கள் 30,000க்கும் அதிகமானோர் தங்களுடைய விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.
அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் தொழில், சுற்றுலா, கல்வி என பல்வேறு துறை சார்ந்து 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர்.
இதில் பலர் தங்கள் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க குடியுரிமை பெறாமல் அங்கு தங்கிய 96% வெளிநாட்டுப் பயணிகள் பற்றி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும், 5 கோடி பேருக்கு விசா காலம் முடிவடைந்துள்ளது. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். இவர்களில் 30,000 பேர் விசா காலம் முடிவடைந்த நிலையிலும் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளதாகவும், மேலும் 6,000 பேர் தங்களது விசா காலம் முடிவடைந்த பின்னரே அமெரிக்காவிலிருந்து அவர்கள் நாட்டுக்குச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய மாணவர்களில் 9,897 பேர் 2016 ஆம் ஆண்டு இறுதியில் விசா காலம் முடிவடைந்து அமெரிக்காவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களில் 4,545 பேர் விசா காலம் முடிவடைந்தும் சட்டத்துக்கு புறம்பான முறையில் அமெரிக்காவில் தங்கியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.