ஹைட்டி | வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கூட்டநெரிசல்.. 30 பேர் உயிரிழந்த சோகம்!
கனமழையிலிருந்து தப்பிக்க மக்கள் ஒரே நேரத்தில் நகர்ந்ததால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்காவின் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மிலோட் நகருக்கு அருகில், அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க லாஃபெரியர் சிட்டாடல் எனப்படும் மலைக்கோட்டை அமைந்துள்ளது. ஹைட்டியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அந்தக் கோட்டை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த மலைக்கோட்டை 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரான்சிடமிருந்து ஹைட்டி சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்கு பிறகு கட்டப்பட்டது. இந்தக் கோட்டை மிகவும் பிரபலாமான சுற்றுலாத்தலமாக இருப்பதால், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதேசமயம், இந்த மலைக்கோட்டையில் ஆண்டுதோறும் திருவிழா ஒன்றும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்தான், வார இறுதி நாளான நேற்றைய முன்தினம் (பிப்ரவரி 11) லாஃபெரியர் சிட்டாடல் மலைக்கோட்டைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அந்தக் கோட்டையில் கூடியிருந்தனர்.
இந்த சூழலில்தான், திடீரென அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது, மழையில் நனையாமல் இருப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கான மக்கள் நகர ஆரம்பித்ததால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராதவிதமாக 30 பேர் உயிரி்ழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹைட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைட்டி நாட்டின் பிரதமர் அலிக்ஸ் டிடியர் ஃபில்ஸ்-ஐமே இந்த விபத்து குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், துயரத்தில் வாடும் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்தத் துயரமான மற்றும் பெரும் துன்பமான நேரத்தில் அவர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆதரவை உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, அரசியல் நிலைத்தன்மை மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஆகிய மூன்று பெரும் சவால்களை ஹைட்டி தற்போது எதிர்கொண்டு வரும் வேளையில், லாஃபெரியர் சிட்டாடலில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு அந்த நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

