ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா.. 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஓமனில் எண்ணெய்க் கப்பலை அமெரிக்க ராணுவம் தாக்கிய நிலையில், 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் உருமாறியது. காரணம், 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே, போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்துவருகிறது. அதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், ஓமன் வளைகுடாவில் ஜூன் 9ஆம் தேதி இரவு 11:14 மணிக்கு பலாவ் கொடியை ஏந்திய எம்/டி செட்டெபெல்லோ என்ற எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் கூற்றுப்படி, அந்த கப்பல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதால், அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த எண்ணெய்க் கப்பல் ஈரானிலிருந்து எண்ணெய்யை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் தாக்குதல் சம்பவத்தை, இந்தியா வன்மையாகக் கண்டித்ததுடன், கப்பலில் இருந்த இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தது. இதையடுத்து, கப்பலில் 24 இந்திய மாலுமிகளில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். 3 மாலுமிகள் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போன மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

