GAZA|3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறப்பு!
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக, 59, 106 பாலஸ்தீனர்கள் நேற்றைய தேதிவரை (22.7.2025) கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் பட்டினி காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்து வருவதாக காசாவின் பிரபல மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட காசாவில் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்றுவரை முடிவை எட்டவில்லை. அங்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களான கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
மனிதாபிமான அமைப்புகளின் உதவியின் மூலம் உணவுகளை பெற முயற்சித்தாலும், இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமாக தாக்குதலில், உணவு வாங்க செல்லும் வழியிலேயே 1000 கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவப்படையால் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "காசா பகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்துள்ளனர். இதனால், ஒவ்வொரு கணமும் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர். " என்று காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தின் இயக்குனர் முகமது அபு சல்மியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது மேலும், கவலையை அதிகரித்துள்ளது.
காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். “பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான்” என கடந்த 2021-ல் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார். இப்போது அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. வேறு எந்த மாற்றமும் அங்கு ஏற்படவில்லை.
காசாவில் ஆறு வாரம் போர் நீட்டிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
நெருப்பு, புழுதி, புகை, தாக்குதலில் அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மனித உடல்களின் பாகங்களுக்கு மத்தியில்தான் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக காசாவில் முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் தங்களது வாழ்க்கை சூழலை பகிர்ந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், வசித்து வரும் கூடாரங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்தே, தற்போதுவரை உயிரை காப்பாற்றிக்கொள்ள பல லட்சக்கணக்கான மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கான தீர்வோ தற்போதுவரை எட்டப்படவில்லை.