அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் வெளியேற்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. C-17 விமானம் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் புறப்பட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக 18 ஆயிரம் பேரை வெளியற்ற அமெரிக்கா முடிவு செய்த நிலையில், 205 பேரை ராணுவ விமானம் மூலமாக இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த விமானம் குறைந்தது 24 மணி நேரம் இந்தியாவிற்குள் வராது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய மற்ற நாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியா இருந்தார். அந்த வகையில், ”சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்புவோம்" என்று கடந்த மாதம் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார்.
இந்தியா இதற்கு ஒத்துழைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் கூறினார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெறுவதில் மோடி சரியான முடிவை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ள சுமார் 18,000 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளனர். 2023-24 காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 1,100 இந்தியர்களை திருப்பி அனுப்பியது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், 90,415 இந்தியர்கள் அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர் என அமெரிக்க அதிகாரிகள் புள்ளி விவரங்களை கூறுகின்றனர்.