மம்தானி, ஸ்மிருதி மந்தனா
மம்தானி, ஸ்மிருதி மந்தனாpt web

2025 Recap | கவனத்தை ஈர்த்த 10 ஆளுமைகள்.. மந்தனா முதல் மம்தானி வரை

2025ஆம் ஆண்டில் உலகின் கவனத்தை ஈர்த்த 10 ஆளுமைகள் குறித்துப் பார்க்கலாம்.

1. பாஜகவின் இளம் தேசிய முகம்

bjp national working president in who is nitin nabin
nitin nabinx page

43 வயதாகும் நிதின் நபின் (Nitin Nabin), பாரதிய ஜனதா கட்சியின் மிக இளம் வயதில் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக பிஹார் தேர்தலில் பாட்னாவின் 'பங்கிபூர்' தொகுதியில் வெற்றி பெற்று, தொடர்ந்து 5-வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். இளம் வயதினரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்திப் பிற அரசியல் கட்சிகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக-வினர் இவரது தேர்வு குறித்துப் பெருமைப்படுகின்றனர்.

2. கன்னட இலக்கியவாதியின் உலக மகுடம்

Britain Internatioan Booker Prize 2025 Banu Mushtaq
Britain Internatioan Booker Prize 2025 Banu Mushtaq

கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் தனது 'ஹார்ட் லேம்ப்' (Heart Lamp) சிறுகதைத் தொகுப்பிற்காகச் சர்வதேச புக்கர் பரிசை (International Booker Prize) வென்றார். பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்குக் கொடுக்கப்படும் இந்தப் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் மற்றும் இரண்டாவது இந்திய எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார் பானு. இவர், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகத் தனது எழுத்துக்களின் மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

3. தடைகளைத் தகர்த்த கிரிக்கெட் நாயகி

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனாx

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை இந்த ஆண்டில் நிகழ்த்தினார் ஸ்ம்ருதி மந்தனா. 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றதில் மந்தனா முக்கியப் பங்காற்றினார். காதலருடனான திருமணம் நின்றுபோனது, தந்தையின் திடீர் உடல்நலக் குறைவு போன்ற தனிப்பட்ட சரிவுகளால் துவண்டு போகாமல் மீண்டும் கிரிக்கெட் களம் கண்டு தீரத்துடன் செயல்பட்டு வருகிறார்.

4. ஆப்பிரிக்க பெண் அதிபரின் ஆளுமைத் திறன்

Samia Suluhu Hassan
Samia Suluhu Hassan

தான்சானியா (Tanzania) நாட்டின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹாசன் (Samia Suluhu Hassan), 2025-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 98% வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்று ஆப்பிரிக்க அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார் . ஆப்பிரிக்காவின் உட்கட்டமைப்பை மாற்றியமைக்கும் ரயில்வே திட்டம் மற்றும் நீர்மின் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். 2025இல் 300 மில்லியன் ஆப்பிரிக்கர்களுக்கு மின்சார வசதி அளிக்கும் திட்டத்தை முன்னின்று வழிநடத்தினார்.

5. பிஹார் மக்களின் நம்பிக்கை நாயகர்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார்
பிகார் முதல்வர் நிதிஷ் குமார்pt web

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றதன் மூலம் 10ஆவது முறையாக பிஹார் முதல்வராகப் பொறுப்பேற்றுச் சாதனை படைத்தார் நிதீஷ் குமார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடனான கூட்டணி மற்றும் நலத் திட்டங்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தாலும், இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதீஷின் மீது பிஹார் மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

6. திரையுலக வசீகரனின் அரை நூற்றாண்டு

நடிகர் ரஜினிகாந்த் 75ஆவது பிறந்தநாள்
நடிகர் ரஜினிகாந்த் 75ஆவது பிறந்தநாள்pt

இந்தியத் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவிக்கப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த ஆண்டில் தனது 75ஆவது பிறந்தநாளையும் கொண்டாடினார். இந்த வயதிலும் கதாநாயகனாக ரஜினி நடிக்கும் படங்கள் வசூலைக் குவிக்கின்றன. இந்த ஆண்டு வெளியான ‘கூலி’ யைத் தொடர்ந்து இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துவருகிறார் என்றும் வசீகரிக்கும் ரஜினி.

7. இசைஞானியின் சிம்பொனி சாதனை

இளையராஜா, முக ஸ்டாலின்
இளையராஜா, முக ஸ்டாலின்எக்ஸ் தளம்

மேற்கத்திய செவ்வியல் இசையின் உச்சமான சிம்பொனியை (Symphony) லண்டனில் அரங்கேற்றி இசை ரசிகர்களை வியக்க வைத்தார் இசைஞானி இளையராஜா. இவரது சிம்பொனி சாதனையை கௌரவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியது. 80 வயதைக் கடந்துவிட்ட இளையராஜா தற்போது தனது இரண்டாவது சிம்பொனியை இயற்றி வருகிறார்; திரைப்படங்களுக்கும் இசை அமைத்துவருகிறார்.

8. பாப் இசையின் பில்லியன் டாலர் ராணி

இசையுலகில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முதல் பெண் கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றார் டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift). 'தி லைஃப் ஆஃப் எ ஷோ கேர்ள்' (The Life of a Showgirl) என்ற தனது 12ஆவது ஸ்டுடியோ ஆல்பத்தை வெளியிட்டார். இது வெளியான 10 வாரங்களிலேயே பில்போர்டு 200 தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

9. செயற்கை நுண்ணறிவு புரட்சியின் நாயகன்

NVIDIA
NVIDIA

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைவராக, செயற்கை நுண்ணறிவு புரட்சியின் நாயகனாகத் திகழ்ந்தார் ஜென்சன் ஹுவாங் (Jensen Huang). உலகப் பொருளாதாரம் சிப் தயாரிப்பைச் சார்ந்துள்ள சூழலில், ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான இவரது நிறுவனத்தின் வளர்ச்சி இவரை உலகின் டாப் 5 பெரும் செல்வந்தர்களில் ஒருவராக்கியது. என்விடியா உருவாக்கிய 'பிளாக்வெல்' (Blackwell) வரிசை சிப், முந்தைய சிப்புகளை விட 30 மடங்கு அதிக வேகத்தில் ஏஐ பணிகளைச் செய்யும் திறன் கொண்டது.

10. வல்லரசு மண்ணில் எதிர்க்குரலின் முகம்

Zohran Mamdani
Zohran Mamdanipt web

நியூயார்க் (New York) நகர மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார் ஸோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani). நியூயார்க் நகர வரலாற்றில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை இவர் பெற்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கடுமையான விமர்சகரான மம்தானியின் வெற்றி, உலக அளவில் முக்கிய அரசியல் முன்னகர்வாகப் பார்க்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com