சீனாவில் நடந்த சர்வதேச ரோபோ போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 330 குழுக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ரோபோடிக் திறனை வெளிப்படுத்தினர். இப்போட்டி பார்வையாளர்களின் கண்களுக்கும் விருந்து படைத்தது. இரு ரோபோக்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டது பார்வையாளர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை அளித்தது.
நவீன கணினி யுகத்தில் பல்வேறு துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரோபோடிக் விஞ்ஞானிகளும், மாணவர்களும், ரோபோக்கள் தொடர்பான ஆய்வில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சீனாவில் ஆண்டுதோறும் உலக ரோபோ கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. கடந்த 23 ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடந்த இந்த ஆண்டுக்கான கருத்தரங்கையொட்டி ரோபோக்களின் கண்கவர் சண்டை போட்டி நடத்தப்பட்டது.
இதில் உலகம் முழுவதும் இருந்து 330 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் தங்களது ரோபோடிக் ஆய்வு தொடர்பான துறை ரீதியான பணிகளை இப்போட்டியில் காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ரோபோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டுக் கொண்டது திரைப்படங்களையும் மிஞ்சும் அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் மிகப்பெரிய சந்தையாக சீனாவே தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இத்தகைய போட்டிகள் அங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆளில்லா விமான பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.