அமெரிக்கா | 20,000 பேர் பணி நீக்கம்.. ட்ரம்ப்-க்கு எதிராக போராட்டத்தில் மக்கள்!
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குடியேற்ற நடைமுறை, வரிவிதிப்பு, ஆட்குறைப்பு என பல உத்தரவுகளைப் பிறப்பித்து உலகையே அச்சுறுத்தி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவைத் துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2.3 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்க அரசாங்கப் பணியாளர்களின் அளவைக் குறைக்க அதிபர் ட்ரம்பும், Doge அமைப்பில் ஆலோசகராய் இருக்கும் எலான் மஸ்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2,00,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணிநீக்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு வருவாய் சேவை (IRS) பெருமளவிலான வேலை குறைப்புகளை அறிவித்துள்ளது. அது, ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மாலை பணிநீக்கக் கடிதங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் அதன் பணியாளர்கள் எண்ணிக்கை 25% வரை குறையும்.
இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் (மே) நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1,400க்கும் மேற்பட்ட இடங்களில்'ஹேண்ட்ஸ் ஆப்' எனப்படும், 'உரிமைகளில் கைவைக்காதே' என்ற பெயரில் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. மாகாண தலைநகரங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இந்த போராட்டம் ஜனநாயக கட்சியின் ஆதரவு இயக்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பல வகை எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி போராடினர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை, "ட்ரம்பின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை அவர் எப்போதும் பாதுகாப்பார். ஜனநாயக கட்சியினரின் நிலைப்பாடு சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினருக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி வழங்குவதாகும். அது இந்தத் திட்டங்களை திவாலாக்கி அமெரிக்க குடிமக்களை நசுக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.