இங்கிலாந்து | 200 நிறுவனங்கள் 4 நாட்கள் மட்டும் வேலை செய்ய முடிவு!
உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலர், 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், ஒருசில நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வைத்தால் என்ன ஆகும் என சோதனை முயற்சிகளைத் துவங்கின. சோதனைகளின் முடிவுகள், பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன், நிறுவனங்களுக்கும் நல்ல உற்பத்தி கிடைப்பதாகத் தெரிவித்தன.
இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள 200 நிறுவனங்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்க முடிவு செய்துள்ளன.
இந்த மாற்றம் முதலில் சுமார் 30 மார்க்கெட்டிங், விளம்பரம் மற்றும் பத்திரிகை தொடர்பு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து 29 தொண்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் 24 தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இதைப் பின்பற்றின.
பின்னர், வணிகம், ஆலோசனை மற்றும் மேலாண்மைத் துறைகளில் உள்ள மேலும் 22 நிறுவனங்களும் இந்த குழுவில் இணைந்தன. இதன்மூலம், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் பணியாளர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே ஊதியம் வழங்கப்படும். அதாவது, நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வதால், அதற்காக எந்த பிடித்தமும் செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் உள்ள 18-34 வயதுடையவர்களில் சுமார் 78 சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளில் நான்கு நாள் வேலை வாரம் வழக்கமாகிவிடும் என நம்புகின்றனர்.
முன்னதாக, வாரத்தில் 4 நாள் மட்டும் வேலைநேரத்தைக் கடைபிடிக்கும் பட்டியலில் 21 நாடுகள் உள்ளன. அதில், கடந்த வருடம் பிப்.1 முதல் ஜெர்மனியும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.