கிரீஸ் நாட்டில் மூன்று பேர் பாராஷூட்டில் பயணம் செய்தபோது கயிறு அறுந்து விழுந்ததில் இரண்டு பேர் மரணமடைந்தனர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் விடுமுறையைக் கொண்டாட கிரீஸ் நாட்டிலுள்ள ரோடீஸ் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் பாராசூட் விளையாட்டு இருந்ததால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாராஷூட்டில் சென்றிருக்கின்றனர்.
எதிர்பாராத விதமாக பாராஷூட்டின் கயிறு அறுந்திருக்கிறது. அந்நேரம் காற்றும் பலமாக வீசியதால் மூவரையும் அடித்துச்சென்று அங்கிருந்த பாறையின்மீது வீசியிருக்கிறது. இதனால் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர். ஒரு 15 வயது சிறுவன் மட்டும் பாறைக்கு அருகில் பலத்த காயங்களுடன் இருப்பதைக் கண்டறிந்த கடலோர காவல்படை அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இறந்த இரண்டு பேரில் ஒருவர் 13 வயது சிறுமி என்றும், மற்றொருவர் 15 வயது சிறுவன் என்றும், க்ரீக்கின் கடலோர காவல்படை செய்தி நிறுவனம் முதலில் தெரிவித்திருந்தது. ஆனால் பிஏ நியூஸ் ஏஜென்ஸி, 13 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் பாறைகளுக்கு அருகில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனும், இறந்த சிறுவனும் இரட்டையர்கள் என கிரீக் செய்திகள் கூறியுள்ளது. எனினும், காவல்படை பிஏவுக்குக் கொடுத்த தகவலில் 15 மற்றும் 13 வயதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் 15 வயதில் ஒரு சிறுமி எனக் கூறியுள்ளது.
தற்போது க்ரீக் நாட்டில் இரண்டு அல்லது மூன்று பேரை ஒரே நேரத்தில் பாராஷூட்டில் அனுப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தின்போது விசைப்படகு ஓட்டிய நபர் மற்றும் வாட்டர்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இருவரையும் காவலில் வைத்துள்ளதாகவும், இருவரும் இன்று அரசு வக்கீல் முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.