மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு

மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு

மியான்மரில் ஆங் சாங் சூச்சிக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வலுக்கத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

மியான்மரில் ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியினர் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 83 சதவீத வாக்குகளை பெற்று மீண்டுமொரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி, ராணுவத்தால் ஆங் சாங் சூச்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை ராணுவம் கையாண்டு வருகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் நெருங்கிய நிலையில், மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கோன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். யாங்கோனில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கையெறி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தி கலைத்தனர்.

இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக பல வாரங்களாக நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த அந்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் போலீஸ் மற்றும் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் இந்த இறப்பை கணக்கிட்டுக் கூறியதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி குறைந்தது 18 மக்கள் இறந்தனர். அத்துடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடக்குமுறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. "தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மியான்மர் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் ஒன்று கூடி ராணுவத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியிருக்கிறார்.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ``மியான்மர் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க வன்முறை இது. நாங்கள் பர்மாவின் தைரியமான மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், அவர்களின் விருப்பத்திற்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் ஒரே குரலில் பேச ஊக்குவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இன்று நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ கால் மூலம் ஆஜராகினர் ஆங் சாங் சூச்சி. இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, ஆங் சாங் சூச்சி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு நீதிமன்றமே இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிந்தது. இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் தற்போது மியான்மரில் மீண்டும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com