ஆஸ்திரேலியா விமான விபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
69 வயதான விமானி ஒருவர் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பயணிகளை கடற்கரையையொட்டிய பகுதிகளை சுற்றிக்காட்டுவதற்காக சிறிய இலகுரக விமானத்தில் அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிரிஸ்பேனின் வடகிழக்கே உள்ள பகுதியில் விழுந்தது.
விபத்துக்குள்ளான ராக்வெல் இன்டர்நேஷனல் விமானம் மோர்டன் விரிகுடாவில் தலைகீழாக மிதக்கும் படங்கள் வெளியாகின. " விபத்தில் உயிரிழந்த ஆண் பயணி மற்றும் குழந்தைகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நேரத்தில் இது ஒரு சோகமான விபத்து" என்று காவல்துறை அதிகாரி கிரேக் வைட் கூறினார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆணையர் அங்கஸ் மிட்செல் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை ஆறு முதல் எட்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.