அமெரிக்க பல்கலையில் மாணவர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!
அமெரிக்காவில், பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளான நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியாக வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கும் படிக்கும் 22 வயது மாணவரான டிரிஸ்டான் ஆண்ட்ரு டெர்ரல் என்பவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். உடனடியாக அங்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர்கள் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்து கைகளை தூக்கிய படி மாணவர்கள் பதற்றத்துடன் மாணவர்கள் வெளிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.