கடலுக்கு அடியில் கிளம்பிய பூதம்.. எல்.நினோ எழுப்பிவிட்ட அரக்கன்.. 16 அடியில் ராட்சத உயிரினம்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக, அதிகம் வெப்பம் அடையும் ஒரு காலநிலை மாற்றத்தைத்தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். இந்த இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகின் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, பயிர் விளைச்சல் குறையும், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
இவ்வாறு மனிதர்களைப் பெருமளவில் பாதிக்கும் இந்தக் காலநிலை மாற்றத்தால், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில், வெப்பமான கடல்நீரில் வாழக்கூடிய அரிய வகைக் கடல் உயிரினமான திமிங்கலச் சுறா ஒன்று சமீபத்தில் கண்காணிக்கப்பட்டுள்ளது. 14 முதல் 16 அடி நீளம் வரை வளரக்கூடிய அழிந்து வரும் உயிரினமான இது, கலிபோர்னியா கடற்கரையிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள சாண்டா பார்பரா தீவுக்கும் மாலிபுவுக்கும் இடைப்பட்ட பசிபிக் பெருங்கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உயிரினத்தை, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு நிலவும் 'சூப்பர் எல் நினோ' நிகழ்வு காரணமாக பசிபிக் பெருங்கடல் மற்றும் கலிபோர்னியா கடற்கரைப் பகுதி நீர் வழக்கத்தைவிட அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே இது போன்ற வெப்ப மண்டல மற்றும் அரிய கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரையை நோக்கி ஈர்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எல் நினோ பருவநிலை மாற்றத்தால் வரும் வாரங்களிலும் மேலும் பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் கலிபோர்னியா கடற்கரைப் பகுதிகளில் தென்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

