16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ
அமெரிக்காவில் 16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்டின் டவர் தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மார்ட்டின் டவர் உள்ளது. இந்த டவர் மொத்தமாக 16,000 டன் எடை கொண்ட இரும்பினால் கட்டப்பட்டது. 21 மாடிகளை கொண்ட மார்ட்டின் டவர் 16 விநாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
மார்ட்டின் டவர், கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக அது காலியாக இருந்து வந்துள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் இந்தக் கட்டடத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்களின் வியாபாரம் திவாலானதைத் தொடர்ந்து, அது காலியாக இருந்து வந்தது.
மார்ட்டின் டவரின் தற்போதைய உரிமையாளர், அதை சீர் செய்ய பல கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அது கைகொடுக்கவில்லை. இதையடுத்து அதை தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் புதியதாக ஓர் கட்டடத்தை உருவாக்குவதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மார்ட்டின் டவரை தரைமட்டமாக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். இந்தக் கட்டடத்தை தரைமட்டமாக்க சுமார் 219 கிலோ வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், நாங்கள் நினைத்ததை விட அது சத்தமாக இருந்ததாகவும் கட்டடம் விழுந்தபோது அதிர்வு அதிகமாக இருந்தது எனவும் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.