இங்கிலாந்து|குடியேற்றத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பு!
ஒரு காலத்தில் பல வெளிநாடுகளை கைப்பற்றிய பிரிட்டன் வெளிநாட்டவர்களால் பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. அங்கு, ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டிருக்கும் போராட்டத்தைப் பற்றி பார்க்கலாம்.
“ஆங்கிலப் பேரரசில் சூரியன் மறைவதில்லை” என உலகத்தின் பெரும்பகுதியை கட்டி ஆண்ட பிரிட்டன் இன்று மிகப்பெரிய பிரச்சனை ஒன்றை சந்தித்து வருகிறது. வெளிநாட்டவர்கள் அதிகளவில் பிரிட்டனில் குடியேறுவருவதால், அந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேர்கிறது.
இந்நிலையில்தான் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிராக பிரிட்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று வெடித்துள்ளது. தீவிர வலதுசாரி ஆதரவளரான டாமி ராபின்சன் “unite the kingdom" என்ற பெயரில் ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில், இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க கூறி முழக்கமிட்டனர். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட வேண்டும். எங்கள் நாடு எங்களுக்கு திரும்பத் தரப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்று பின்னர் பாதியாக அதனை கிழித்து ஆரவாரம் செய்தனர். இது மற்ற போராட்டங்களை போல சாதாரணமானதல்ல என்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பானது என்றும் கூறினர். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியிருக்கும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களுக்கு பெயர்போன டாமி ராபின்சன் பேசும்போது, ”இந்த போராட்டம் ஒரு கலாசார புரட்சி மற்றும் முன்பு கண்டிராத தேசபக்தி ஒற்றுமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம், இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து எம்பி-க்கள் இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் காவல் துறையினர் தடுக்க முயன்றனர். இதில், காவல் துறையினரே தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. இந்த கலவரத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் நடுவில் வீடியோ இணைப்பின் மூலம் தோன்றிய எலான் மஸ்க், "நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும், அதுதான் உண்மை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். தொடர்ந்து, கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தைக் கலைக்க அவர் அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது, பிரிட்டனில் நடந்து வருகிறது. வெளிநாடுகளை தங்கள் பிடியில் கொண்டு வந்த அதே பிரிட்டனில் தற்போது வெளிநாட்டவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது காலத்தின் நகைமுரண்களில் ஒன்றாகவே பார்க்கவேண்டியுள்ளது