காங்கோவில் விமானம் விபத்து | 2 லெப்டினென்ட் ஜெனரல்கள் உட்பட 14 பேர் பலி!
காங்கோவின் கெங்கே நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மூத்த இராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் முடொம்போ கட்டலாயி டியெண்டே மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பக்குமி லிகுலியா உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
காங்கோவின் கிக்விட் (Kikwit) நகரில் இருந்து அரசுசார் அதிகாரப்பூர்வப் பணிகளை முடித்துக் கொண்டு, தலைநகர் கின்சாஷாவிற்கு (Kinshasa)விமானம் ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் எதிர்பாராதவிதமாக திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், குவாங்கோ (Kwango) மாகாணத்தின் தலைநகரான கெங்கே அருகே உள்ள ஒரு பகுதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மூத்த ஜெனரல்கள் உட்பட விமானத்தில் பயணித்த 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் காங்கோ லெப்டினன்ட் ஜெனரல்கள் முடொம்போ கட்டலாயி டியெண்டே மற்றும் பக்குமி லிகுலியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான சூழ்நிலைகளையும் காரணத்தையும் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விமானத்தின் இடிபாடுகள் மற்றும் கருப்புப் பெட்டியை (Black box) மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதியில், ருவாண்டாவின் ஆதரவு பெற்ற எம்23 குழு உள்ளிட்ட ஏராளமான கிளர்ச்சிக் குழுக்களுடன் காங்கோ இராணுவம் தொடர்ந்து மோதி வரும் வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்தது.

