பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு!
Published on

பாகிஸ்தானில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து விஷ்ணு கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து, பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கைபர் பக்துன்க்வா தொல்லியல் துறையைச் சேர்ந்த பசல் காலிக் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்து சாஹி அரச வம்ச காலத்தில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர். ஸ்வாத் மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளதாகவும், அங்கு இந்து சாஹி அரச வம்சத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் காலிக் தெரிவித்தார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷ்ணு கோயிலை ஒட்டி, ராணுவ முகாம், கண்காணிப்புக் கோபுரங்கள் போன்றவை அமைந்து இருந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன. பக்தர்கள் புனிதநீராடுவதற்கான குளம் ஒன்றும் கோயில் அருகில் அமைந்திருக்கிறது.

ஸ்வாத் மாவட்டத்தில் காந்தார நாகரீகத்தைச் சேர்ந்த ஒரு கோயில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று இத்தாலிய தொல்லியல் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் லூக்கா கூறியிருக்கிறார். இந்த மாவட்டத்தில் பவுத்த வழிபாட்டு தலங்கள் பலவும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com