அழகி போட்டி நடக்க இருந்த ஓட்டலில் தீ விபத்து: 12 பேர் பலி
அழகி போட்டி நடக்க இருந்த நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தனர்.
ஜார்ஜியாவில் கருங்கடல் நகரம் என அழைக்கப்படும் பாடுமியில் லியோ கிராண்ட் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 22 மாடி கொண்ட இந்த ஓட்டலில், மிஸ் ஜார்ஜியா அழகி போட்டி நடக்க இருந்தது. இதற்காக ஜார்ஜியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அழகிகள் இங்கு வந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 13 வண்டிகளில் வந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருந்தும் இந்த தீ விபத்தில் 12 பேர் பலியாயினர். 12 படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்நாட்டு பிரதமர் ஜியார்ஜி விரிகஷ்விலி சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.